இன்றைய கோபுர தரிசனம் கோடி புண்ணியம் பாவ விமோசனம் இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் ம…

இன்றைய கோபுர தரிசனம் கோடி புண்ணியம் பாவ விமோசனம் இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் மிகவும் பழமையான பெருமாள் தலம் கண்ணாகக் காக்கும் கண்ணிறைந்த பெருமாள்!
==================
புதுக்கோட்டை மாவட்டம்
மலையடிப்பட்டிக்குச் சென்றால் ஐந்து கோலங்களில் பெருமாளையும், எட்டுக் கோலங்களில் லட்சுமியையும் தரிசனம் செய்யலாம். சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட குடைவரைக் கோயில் மலையடிப்பட்டியில் இருக்கிறது.

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் இருந்து கிள்ளுக்கோட்டை வழியாகச் சென்றால் 17-வது கிலோமீட்டர் தொலைவில் இந்தக் கோயில் அமைந்துள்ளது.

அருள்தரும் எட்டு லட்சுமிகள்

நின்ற கோலத்தில் புருஷோத்தமனாகவும், அமர்ந்த கோலத்தில் ஹயக்ரீவர், நரசிம்மர் மற்றும் பரமபதனாத வடிவிலும், கிடந்த கோலத்தில் ரங்கநாதனாகவும் பெருமாள் காட்சிதருகிறார். ஆதிசேஷன் மேல் பள்ளிகொள்ளும் அரங்கனின் திருவடி அருகே பூதேவி, நாபிக்கமலத்தில் பிரம்மா, சுற்றிலும் அஸ்வினி, தேவர்கள், கின்னரர், கிம்புருடர் அப்ஸரஸ்கள் சூழ திவாகரமுனிக்குக் காட்சிகொடுத்தபடி இருக்கிறார். பெருமாளுக்கு அருகிலேயே திவாகர முனி அமர்ந்து அருளுகிறார்.

அரங்கர் திருமார்பில் ஒரு லட்சுமியும், புண்டரீகப் பெருமாள் மற்றும் வைகுண்ட நாதருக்கு அருகே ஸ்ரீதேவி-பூதேவி என்னும் உபயதேவிகளாக இரண்டிரண்டு லட்சுமிகளும், லட்சுமி நாராயணர் மடியில் ஒரு லட்சுமியும், தனிக்கோயில் கமலவள்ளித் தாயாரும், தீப ஸ்தம்பத்துக்கு அருகில் ஒரு தீபலட்சுமியுமாக எட்டு லட்சுமிகளை ஒரே இடத்தில் தரிசனம் செய்யலாம்!

சாட்சியாக நிற்கும் தூண்கள்

திருமால் கண்மூடித் தூங்கும் பாவனையை அறிதுயில் என்பார்கள். கண் மூடி இருந்தாலும் நடக்கும் எல்லாச் செயலும் அவன் அறிந்தவாறே நடைபெறுகிறது என்பது இதன் பொருள். அரங்கருக்கு முன்புறம் உள்ள இரண்டு தூண்கள் அரி நேத்ர தூண்கள் என்றும் திருநேத்ரத் தூண்கள் என்றும் சொல்லப்படுகின்றன. நடைபெறும் அனைத்தையும் அந்தத் தூண்களின் வழியே அறிந்தவாறு திருமால் கண் துயில்கிறார் என்று சொல்லப்படுகிறது. நம் வருகை முதல், பிரார்த்தனைவரை அனைத்தையும் அந்தத் தூண்கள் மவுன சாட்சியாக நின்று பெருமாளிடம் பரிந்துரைத்துக்கொண்டிருக்கின்றன என்பது ஐதீகம்.

திருமாலின் திருவிளையாடல்

திவாகர முனிவருக்கு அரங்கன் திருக்கோலத்தின் மீது அபார அன்பு. நாளும் ஒரு அரங்கன் திருக்கோலத்தைத் தரிசிக்காமல் எந்த உணவையும் உண்ண மாட்டார். ஒரு நாள் கால் போன போக்கில் அரங்கனைத் தேடிப் போனார். பசி கண்ணை மறைக்கவே, தள்ளாடித் தள்ளாடி நடந்தபோது ஒரு அழிஞ்சில் மரமும் அதன் அடியில் ஒரு மாடு மேய்க்கும் சிறுவனையும் கண்டார். அவனிடம் அருகில் இருக்கும் அரங்கன் கோயில் பற்றிய தகவல் கேட்டார்.

“பேர் தெரியாது சாமி. அதோ அந்த மலைக்குக் கீழ ஒரு குகையில ஒரு சாமி படுத்துக் கெடக்குது. நாங்க அவரைப் போய் கும்புடுவோம். எங்க ஆடு, மாடுகளைக் காப்பாத்தறதனால ‘பட்டிசாமி’ன்னு கும்புடுவோம். மலைக்குக் கீழ இருக்கறதனால மலையடிபட்டிசாமின்னு சொல்லுவோம். அதனால இந்த இடத்துக்கு மலையடிப்பட்டின்னு பேரு” என்று வெகுளித்தனமாகச் சொல்லிவிட்டு ஆடு விரட்ட மலையைப் பார்த்து நகர்ந்தான்.

சுட்டெரிக்கும் வெயிலில் அந்தக் குகைக்குச் சென்று உள்ளே பார்க்க ஒன்றுமே புலப்படவில்லை. சிறிது சிறிதாக பாம்பணை மேல் அரங்கன் படுத்துக்கிடப்பதும் பூதேவி இருப்பதும் கின்னரர், கிம்புருடர், வானவர் வணங்குவதும் தெரியத் தொடங்கியது. ஆனந்தக் கூத்தாடி எதிர்ச் சுனையில் குளித்துவிட்டு வந்து காட்டுப் பூக்களைத் தொடுத்து மாலையாக்கி காய்கனிகளைப் பறித்து படைப்பதற்காக எடுத்து வந்தார்.

ஆனால் குகையில் சற்று முன் தான் கண்ட உருவங்கள் எதுவும் தெரியவில்லை. நீண்ட படுக்கைக் கல்லும் பாறையுமே தெரிந்தன. வெளியே இருந்த அந்த ஆடு மேய்க்கும் சிறுவனை அழைத்து, “இங்கே சாமியெல்லாம் இருந்துச்சே எங்கே என்றார்?”. “இதுதான் நாங்க கும்படற சாமி” என பாறையைக் காட்டினான் சிறுவன். பயந்து போய், “அரங்கா இது என்ன சோதனை” என அரற்றினார். எதிரில் நின்ற இடைச் சிறுவன் பூஞ்சையாய் சிரித்தான். அவன் யார் என உணர்ந்தார். மாலையையும் பழங்களையும் அவன் முன் சமர்ப்பித்து காலில் விழுந்தார்.

பெருமாள் திவாகர முனிவரை எழுப்பி நின்ற கோலத்தில் புருஷோத்தமனாகவும், அமர்ந்த கோலத்தில் ஹயக்ரீவர், நரசிம்மர் மற்றும் பரமபதநாத கோலத்தையும் காட்டி, கிடந்த கோலத்தில் ரங்கநாதனாகக் காட்சி தந்தார். பின்னர் பெரிய மலை உருவில் காட்சி தந்தார்.

நாமெல்லாம் ஆடு, மாடுகள்

பின்னர் திவாகர முனி வேண்டிக்கொண்டபடி அனைவர் கண்ணுக்கும் தொலைவில் இருந்தே தெரியும் வகையில், கண்ணிறைந்த பெருமாளாக மலை உருவில் காட்சி தரலானார்.

கோயிலின் முன்புறம் சற்று தள்ளி நின்று பார்க்கும் போதே பெருமாள் மலையாகப் படுத்து இருப்பது போன்ற தோற்றம் தெரியும். கோயிலில் உள்ள கல்வெட்டுகள்கூட கண்ணிறைந்த பெருமாள் என்றே குறிப்பிடுகின்றன.

தொடக்கத்தில் மலையையே பெருமாளாக நினைத்து வணங்கிய நிலை மாறி, மலையில் திவாகர முனிக்குக் காட்சி கொடுத்தது போலவே திருவுருவங்களும் அமைக்கப்பட்டு குடைவறைக் கோவிலாக்கப்பட்டு வழிபடப்பட்டுள்ளது.

திவாகர முனி வரலாற்றோடு தொடர்புடைய குகைக்கோவில் என்பதால் திருவனந்தபுரத்துக்கு முன்னாலேயே தோன்றிய குடைவறைத் திருக்கோயில் மலையடிப்பட்டி அருள்மிகு கண்ணிறைந்த பெருமாள் திருக்கோயில்.

திருமாலே மலை. அவர் அடியில் நம்மை சரணாகதி செய்து கொண்டு பட்டியில் அடைபட்ட ஆடு, மாடுகளாக இருப்பவர்கள் நாம். நமக்கு வேண்டுவனவற்றை அவ்வப்போது தந்து நம்மைக் காப்பவன் அவன் என்பதை உலகுக்கு உணர்த்துபவர் திருமலையடிப்பட்டி பெருமாள்.

அருகிலேயே சிவபெருமானுக்கு என ஒரு குடைவறைக் கோவில் குடையப்பட்டு சப்தமாதர்களும் புடைப்புச் சிற்பங்களாக உள்ளனர். குடைவறையின் அமைப்பைக் கொண்டு கி.பி. எட்டாம் நூற்றாண்டு வாக்கில் குடையப்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

திருமங்கை ஆழ்வார், உடையவர், நாதமுனிகள், விஸ்வக்ஷேனர் ஆகியோர் தனி மண்டபத்தில் எழுந்தருளியுள்ளனர். நுழைவாயிலருகே விநாயகர் மாடத்தில் உள்ளார். பொதுவாக கண் மற்றும் இதயம் தொடர்பான நோய்களுக்காக வேண்டிக்கொண்டு தரிசனம் செய்வதும் சரியானவுடன் தரிசனம் செய்து காணிக்கைப் பிரார்த்தனை செய்து விட்டுச் செல்வதும் இங்கு மரபாக உள்ளது. செவ்வாய், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களிலும், ஏகாதசி மாதப்பிறப்பு நாட்கள், சிரவணம், ஆகிய நாட்களிலும் தரிசனம் செய்தால் அல்லல் நீங்கி குபேர சம்பத்துக் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

தீபாவளி கார்த்திகை, ஆடி, தை வெள்ளிக்கிழமைகள், புரட்டாசி சனிக்கிழமைகள் மிகச்சிறந்த நாட்களாகக் கருதப்படுகின்றன.

தினமும் காலை ஏழு மணி முதல் பன்னிரண்டு மணி வரையும், மாலை நான்கு முதல் 6.30 மணிவரையும் தரிசனத்திற்காகக் கோயில் திறந்திருக்கும்.🔵🔵