ஓங்கி உலகளந்த உத்தமன் ! ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி நாங்கள் நம்பாவைக்குச் …

ஓங்கி உலகளந்த உத்தமன் !

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரி பெய்து
ஓங்கு பெருஞ் செந்நெல் ஊடுகயல் உகளப்
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்கக் குடம்நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்!

ஓங்கி உலகளந்த உத்தமன் – த்ருவிக்ரமாவதாரத்தை சொன்னதற்கு ஒரு உயர்ந்த அர்த்தம் இருக்கிறது. இந்த அவதாரம் கருணையின் வடிவம்.

ஸ்ரீவைஷ்ணவ சித்தாந்தத்தை எத்தனை அழகாக திருப்பாவையின் பாசுரங்களில் செதுக்கி இருக்கிறாள் என்பது இந்த பாசுரங்களின் அமைப்பை பார்த்தால் விளங்கும்.

இந்த சிந்தாந்தம், கர்ம ஞான பக்தி யோகங்களை மோக்ஷ சாதனமாக சொல்லவில்லை. ப்ரபத்தி அதாவது சரணாக தியையே மோக்ஷ சாதனமாக சொல்கிறது. அதையும் அர்ச்சிராதி மார்க்கங்கள் வழியாகவே சரணாகதி செய்து ப்ரஹ்மத்தை அடைய வேண்டும் என்று சொல்கிறது. இதையே முதல் பாசுரத்தில், நாராயாணன் என்று பரமபத நாதனை சொன்னாள். இரண்டாவது பாசுரத்தில், பாற்கடலில் பையதுயின்ற பரமன் என்று வியூஹ மூர்த்தியை சொன்னாள். இந்த பாடலில், ஓங்கி உலகளந்த உத்தமன் என்று விபவ அவதார மூர்த்தியை சொல்கிறாள்!

மேலும் த்ருவிக்ரமாவதாரத்தை சொன்னதற்கு ஒரு உயர்ந்த அர்த்தம் இருக்கிறது. இந்த அவதாரம் கருணையின் வடிவம். இந்த அவதாரத்தில் மஹாபலி சக்ரவர்த்தி – அசுரனான போதும், அவன் தேவர்களை வருத்திய போதும் அவனை கொல்லாமல் வாழ்வளித்த அவதாரம்.

இந்த அவதாரத்தில்தான், நல்லவன், தீயவன், ஆஸ்திகன் – நாஸ்திகன் என்று எந்த வித பாரபட்சமுமில்லாமல் எல்லோர் தலையிலும் தன் பாத ஸ்பர்சம் வைத்த அவதாரம். அதனால் சர்வ வ்யாபகத்வம், சர்வக்ஞத்வம் தோன்ற ஓங்கி உலகளந்த உத்தமன் – புருஷோத்தமன் என்று அழைக்கிறாள் ஆண்டாள்.

பகவான் கட்டிப்பொன்போலே – அவன் நாமம் ஆபரணம் போலே என்று அவன் நாமத்துக்கு ஏற்றம் சொல்வர்கள் பூர்வாசார்யர்கள்; உத்தமன் பெயர் என்று திருமந்திரமான ஓம் நமோ நாராயணாய என்ற திருவஷ்டாக்ஷரத்தை ஆண்டாள் குறிப்பிடுகிறாள். இது முதல் பாசுரத்தில் சொன்ன நாராயண நாமத்திலிருந்து தேறும். அந்த நாமத்தை இடைவிடாது அனுசந்தித்து வந்தால் என்னென்ன நன்மைகளெல்லாம் ஏற்படும் சொல்லப் புகுகிறாள் ஆண்டாள். அந்த வகையில் இந்த பாடல் ஒரு மங்களாசாசனம்.

ஓங்கி உலகளந்த உத்தமனின் பெயரை சொல்லி பாடி நீராடி நோன்பிருந்து செல்வங்களை எந்த நாளும் விட்டு நீங்காமல் பெற்று நிறைவோம் என்று ஆண்டாள் மங்களாசாசனம் செய்கிறாள்.

ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம் !

4 thoughts on “ஓங்கி உலகளந்த உத்தமன் ! ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி நாங்கள் நம்பாவைக்குச் …”

Comments are closed.