#வெண்பொங்கல்_புராணம் படித்து ரசித்த பதிவு ஸ்லீப்பிங் டோஸ்.. சாப்பிட்டாலே மந்த…

#வெண்பொங்கல்_புராணம்

படித்து ரசித்த பதிவு

ஸ்லீப்பிங் டோஸ்.. சாப்பிட்டாலே மந்தமா இருக்கும்.. என்றெல்லாம் கிண்டலடிக்கப்படும் வெண்பொங்கல் உண்மையில் ஒரு சமச்சீரான சத்துகள் நிறைந்த உணவாகும்.. வெண் பொங்கலுக்கான லட்சணம் என்னவென்றால் அரிசி எப்போதும் விறைப்பாக ஹெச்.ராஜா போல இல்லாமலும் புன்னகையை வழிய வழிய பூக்கும் எடப்பாடி சிரிப்பு போல மிகக் குழைவாக இல்லாமலும் வெந்திருக்க வேண்டும்.!

அதாவது ஐஸ்க்ரீமை ஸ்கூப்பில் வழித்து உருண்டையாக கிண்ணத்தில் கவிழ்ப்பார்களே.. அந்த உருண்டை போல கரண்டியில் இருந்து தட்டில் உருண்டையாக பொங்கல் விழ வேண்டும் அதுவே நல்ல வெண்பொங்கலுக்கான பதம்.. வெண்பொங்கலுக்கான சரியான இணை இன்றுவரை சாம்பார் மட்டுமே.. இரண்டாமிடம் தேங்காய் சட்னிக்கு.. செட்டிநாட்டு சமையலில் குட்டிக் குட்டி சதுரமாய் கத்திரிக்காய் வெட்டி தண்ணீர் போன்ற கொத்சு சாம்பார் இதற்கு அதகளமாய் இருக்கும்.!

சாம்பாரிலும் சின்னவெங்காயம் போட்டு அரைத்து விட்ட சாம்பார் என்றால் ஆஹா.. இரண்டு கரண்டி பொங்கல் எக்ஸ்டிராவாக நாக்கு கேட்கும்.. வெண்பொங்கலுக்கு சூடான மொறு மொறுப்பான மெதுவடை எம்.ஜி.ஆர் சரோஜா தேவி ஜோடி போல என்றாலும் ஆகச்சிறந்த சைடிஷ்.. சிவாஜி பத்மினி ஜோடி போல சாம்பார் வடை தான்.! இதிலும் சாம்பார் வடையின் லட்சணம் இருக்கிறது.. குலாப் ஜாமூன் போல மெத்தென்று ஊறி வெறும் ஸ்பூனிலேயே கத்தி போல அறுபடும் பதத்தில் நல்ல சூடான சாம்பாரில் மூழ்கியிருக்கவேண்டும்!

கமல் சார் ட்வீட் போல ஊறியும் ஊறாமலும் கணிக்க முடியாத பதத்தில் இருக்கும் சாம்பார்வடை பந்திக்கும் தொந்திக்கும் ஆகாது. பொங்கலை கொதிக்க கொதிக்க சாப்பிடக் கூடாது.. அதன் குழைவுத் தன்மையால் விரல்நுனிகளில் ஒட்டிக் கொள்ளும்.. சூடு தாங்காது விரல்களும் பிறகு நாக்கும் பாதிக்கப்படும்.. பொங்கலை அளவான சூட்டில் சாப்பிடுவது நல்லது! பொங்கலை நடுவில் குழைத்து சாம்பாரை..

இரண்டு கரண்டி ஊற்றி ஒரு அணை போல தேக்கி வைத்துக் கொண்டு சாப்பிடவேண்டும்.. பொங்கலை சாம்பாரில் கொஞ்சம் குழைத்து பிறகு சட்னியில் தோய்த்து ஒரு சிறு விள்ளல் சாம்பார் வடையுடன் சாப்பிடுவது சாலச் சிறந்தது.. பொங்கலை அள்ளிச் சாப்பிடும் ஒவ்வொரு முறையும் மிளகும் முந்திரியும் இருக்கும்படி இருந்தால் திவ்யம்.. முந்திரியை தனியே வறுத்து பொங்கலில் சேர்ப்பதே சரி!

குதிரைகளில் அரபு ஜாதிக் குதிரை என்னும் ஒரு உயர் இனக் குதிரை உள்ளது போல பொங்கலில் சவுராஷ்டிரா சமூகத்து பொங்கல் ஒரு தனி அடையாளம்.. அவர்கள் செய்யும் குழைவில்லாத பொங்கலுக்கு மட்டும் இறைவன் ஒரு சிறப்பு வரம் அளித்துள்ளான்.. அதிலும் பொங்கலுக்கு அவர்கள் வைக்கும் புளி மிளகாய் இஞ்சி சட்னி கைவிரல் ரேகை பாஸ்வேர்ட் போல! அவர்கள் செய்யும் பொங்கலுக்கு மட்டுமே அது அபார இணையாக இருக்கும்!

மதுரையில் முன்பு மேலமாசி வீதி ஆரியபவன் பை-நைட்டில் கிடைக்கும் பால் பொங்கல் மதுரையில் செம ஃபேமஸ்.! 1996லேயே ஒரு பொங்கல் விலை ₹17/- அதற்கு அற்புதமான சாம்பார் வடையும் அதன் விலை ₹10/- தண்ணீருக்கு பதில் அரிசியை பசும்பால் கலந்த நீரில் வேக வைத்து முழு முந்திரிப்பருப்பும் கமகமக்கும் நெய் வாசனையுடன் ஒரு டென்னிஸ் பந்தின் அளவு தான் ஒரு பொங்கல்.!

மக்கள் போட்டி போட்டுக் கொண்டு அலை மோதுவார்கள்.. 20 பொங்கல் 15 பொங்கல் என பார்சல்கள் பறக்கும்.. மாலை 6 மணிக்கு ஆரம்பிக்கும் இந்த பொங்கல் உற்சவம் இரவு 11 மணிவரை சிறப்பாக நடக்கும்.. இன்று கால மாற்றத்தில் பாஸ்தா பொங்கல், மேகி பொங்கல், வெஜிடபிள் பொங்கல், என பொங்கல் பல அவதாரங்கள் எடுத்து இருந்தாலும் எப்போதும் மகாராஜா வெண்பொங்கல் தான்.!

இறுதியாக ஒன்று பொங்கல் சாப்பிட்டால் தூக்கம் வரலாம்.. நிச்சயம் துக்கம் வராது.. தமிழக கோவில்களில் அதிகம் தரப்படும் சூப்பர் ஸ்டார் பிரசாதம் வெண் பொங்கல் தான்.! சில கோவில்களில் தரும் வெண்பொங்கல் பிரசாதங்கள் நாள் முழுவதையும் உங்களை சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.. இது பொய்யில்லை நான் உ(க)ண்ட உண்மை.!
ஏவ்வ்வ்வ்..
திருப்புகழை பாடபாட வாய் மணக்கும் என்பார்கள். படித்த பின் மனம் தேடுகிறது/ பறக்கிறது எங்கே மதுரை பால் பொங்கல் என்று?

தமிழ்நாட்டின் மிகச்சிறந்த உணவு பொங்கல்

— with Kannan Thodur Madapusi.