வைகுண்ட ஏகாதசி விழா ஸ்பெஷல் ! ஸ்ரீரங்கத்தில் ‘விஸ்வரூபம்’ என்றழைக்கப்படும் காலை…

வைகுண்ட ஏகாதசி விழா ஸ்பெஷல் !

ஸ்ரீரங்கத்தில் ‘விஸ்வரூபம்’ என்றழைக்கப்படும் காலை முதல் நேர பூஜை மகத்தானது. இது ஸ்ரீரங்கத்திற்கே
உரித்தான ஒரு தனி வழிப்பாட்டு முறையாகும்.

‘விஸ்வம்’ என்றால் ‘பெரிய’ என்றும் ஒரு பொருள் உண்டு.
‘ரூபம்’ என்றால் உருவம்.

இங்கு உறையும் பெருமாளுக்கே பெரிய பெருமாள் என்றுதான் திருநாமம். பெரியபெருமாள் காலை உறங்கியெழும் இந்த வேளைக்கு விஸ்வரூபம் என்று பெயர் வைத்தது சரியே!

வேறு ஏதாவது காரணம் உண்டோ? உண்டு..!

108 திவ்யதேசங்களில் உள்ள அனைத்து பெருமாளும் முதல் நாள் இரவு இங்கு வந்து அரங்கனிடத்து ஒடுங்கி,
ஒன்றாகி அடுத்த நாள் காலை அவரவர் தம் யதாஸ்தானத்திற்கு எழுந்தருளிவிடுவார்கள்.

அனைத்து திவ்யதேச எம்பெருமான்களும் ஒன்றாகி சேவை சாதிக்கும் இந்த நேரம் மிகப்பெரிய மகத்துவம் பொருந்திய சேவைதானே?

அதனால்தான் இந்த தரிசனம் ‘விஸ்வரூப தரிசனம்’!

தேசிகர் தமது பாதுகாஸஹஸ்ரம் வைதாளிகப் பத்ததியில் (242 சுலோகம்) இந்த திருப்பள்ளியெழுச்சியின் போது
சிவன், நான்முகன், ஸநகர் ஆகியோர் அரங்கனது வாயிலில் இந்த விஸ்வரூப ரங்கனைக் காண்பதற்காக, தரிசிப்பதற்காக காத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்று குறிப்பிட்டு,

உன் திருவடிகளினால் சுகம் பெற்று கொண்டிருக்கும், சக்ரவர்த்தினியாய் விளங்கும் பாதுகையை நீ சாற்றிக் கொண்டு எழுந்தருள வேண்டும் என்று பிரார்த்திக்கின்றார்.

இதனால்தானே என்னவோ? ஆகம ரீதியாகவும், காவேரியினின்று யானையின் மேல் புனித நீர் கொண்டு வந்தவுடன்,

அந்த நீர் கொண்டு அர்ச்சகர்களால் முதலில் பாதுகைக்குத் திருமஞ்சனம் செய்விக்கப் படுகின்றது. இதற்கு ‘திருவடி விளக்குதல்” என்று பெயர்.

ஸ்வாமி தேசிகர் சொன்னது போல் அரங்கன் அதனைச் சாற்றிக் கொள்ளும் முன் முதலில் தன்னை கங்கையிற் புனிதமான காவிரி நன்னீரால் ஸ்நானம் பண்ணிக் கொள்கின்றது.

அரங்கன் கண் விழித்தலுக்கு முன் வீணை இசைக்கப்படுகின்றது. காவிரி நன்னீர் வந்தவுடன் பசுமாடு பின்பக்கமாய் திரும்பி நிற்க வைக்கபபடுகின்றது.

யானை அந்த பரந்தாமனை நோக்கிய வண்ணம் தயாராய் நிற்கின்றது. பசுமாட்டின் வால்பக்கம் மஹாலக்ஷ்மி வாஸம் செய்கின்றாள்.

யானையின் முகத்தில் வாஸம் செய்கின்றாள். பகவான் மஹாலக்ஷ்மியினை
கடாக்ஷித்தவாறு திருக்கண்ணை மெதுவே திறக்கின்றான்.

இந்த அழகினை ரசிக்கின்றார் ஸ்வாமி தேசிகர்.

பத்மா ஜுஷ்டம் பஜது சரணம் பாதுகா லப்தவாரா
ப்ரத்யாஸந்தா தவ பரிஜநா ப்ராதரஸ்தாந யோக்ய
அர்த்த உந்மேஷாத் அதிக சுபகாம் அர்த்த நித்ராநுஷங்காம்
நாபீ பத்மே தவ நயநயோ நாத பஸ்யந்து ஸோபாம் ||

பொருள்:

ஸ்ரீரங்கநாதா! காலைவேளையில் உனக்கு தொண்டு புரியும் கைங்கர்யபரர்கள் வந்து விட்டனர்.

உனது தாமரைப் போன்ற கண்களில் உள்ள உறக்கம் பாதி கலைந்தும், கலையாமலும் உள்ளதால், உனது இமை பாதி மூடியும், திறந்தும் உள்ளது.

இந்த அழகைக் கண்டு நாபி கமலத்தில் உள்ள தாமரை மலர் உனது கண்கள் போலவே மலர்ந்தும் மலராமலும் உள்ளது. இந்த அழகை அவர்கள் அனுபவிக்க வேண்டும்.

உனது திருவடியினை வணங்கி வருடிய மஹாலக்ஷ்மியின் ஸேவையினை இனிப் பகலில் பாதுகை ஏற்றுக் கொள்ள வேண்டும். (ஆகவே துயில் எழுவாயாக!)

சரணம் சரணம் ஸ்ரீரங்கா !
திருவடி சரணம் ஸ்ரீரங்கா !