(௩௰௬) (36) தன்திறன்மேல் தன்னம்பிக்கை! “அப்புறமா படிச்சுக்கலாம்டா, சீக்கிரமா கீழ…

(௩௰௬) (36) தன்திறன்மேல் தன்னம்பிக்கை!

“அப்புறமா படிச்சுக்கலாம்டா, சீக்கிரமா கீழே போ… பக்கத்துத் தெருவில யானை வந்திருக்கு, எப்ப வேணும்னாலும் நம்ம தெருவுக்கும் வந்துடும். யானை வரும் வரை, நம்ம கேட்டைத் தாண்டாத. வந்ததும், ஒரு சவாரி செய்துவிட்டு வா. இந்தா காசு. பத்திரமா வச்சுக்க. சவாரி முடிஞ்சதும் யானை பாகருக்குக் கொடுத்துட்டு நன்றி சொல்லணும், சரியா. யானையத் தொந்தரவு செய்யாத. யானைப் பாகர் சொல்றது படி நடந்துக்க. அவரே உனக்கு வழிகாட்டுவார். அவருக்குத்தான் அவருடைய யானை பற்றித் தெரியும்…” என்று பக்கத்துத் தெரு மளிகைக் கடைக்குச் சென்று வந்த அம்மா வீட்டிற்குள் நுழைந்தவுடன் சரமாரியாகக் கட்டளைகள் விதித்தார். யானையைப் பிடிக்காத பிள்ளைகளும் இருக்க முடியுமோ! விவரம் தெரியத் தொடங்கும் முதலே சிறு விலங்குகளும், பறவைகளும், அவற்றின் குழந்தைகளையும் மிகவும் பிடித்துப்போக, விதிவிலக்காக யானையையும் பிடித்துவிட்டது. வளர்ந்தும் கார்மேகம் போல் தார்சாலையில் தவழ்ந்து வரும் யானைகளை வைத்தகண் வாங்காமல் பார்க்கும் பழக்கம் உண்டு. சென்ற ஆண்டு ஜெய்ப்பூரில் நகர்வலம் போகும் போது, வண்டியை நிறுத்திவிட்டு, சவாரி போகாமலேயே யானையைக் கொஞ்சிவிட்டு, யானையைக் கவனித்துக்கொள்க என்று பாகருக்குக் காசு தந்துவிட்டு வந்தேன். பாண்டி மணக்குல விநாயகர் கோவில் லட்சுமி, கும்பகோணம் கும்பேசுவரருடன் இருக்கும் மங்கலம், காஞ்சியில் காமாட்சியம்மன் கோவிலிலுள்ள 3 யானைகள், திருநாகேசுவரக் குஜாம்பிகை என்று இன்றும் சில கோவில்களுக்குச் செல்வதே யானைக்காதலிகளைக் காணத்தான் என்பது துணைவிக்கும் தெரியும். அவருக்கும் இந்த அழகிகளை மிகவும் பிடிக்கும். சிறு வயதில் வண்டலூரில் மாலை வேளைகளில் குட்டி யானைகளைச் சாலையில் நடத்தி அழைத்து வருவர், அவர்களுக்கு போதிய உடற்பயிற்சி அளிக்க. யானைகுட்டியும் பாகரின் மூங்கிலைப் பிடித்தவாறு குறும்புத்தனம் செய்யாமல் நடந்து வரும். சில நாட்கள், அவரிடம் கெஞ்சி தும்பிக்கை பிடித்த அந்த குச்சியின் மறுபக்கம் இந்தத் தம்பிக்கையில் இருக்கும். சில நேரங்களில், அவற்றின் துறுதுறு வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாது போகும். வால்பாறை சென்ற போது 3 நாட்கள் நேரம் கிடைத்த போதெல்லாம் தேடியும் ஒரு காட்டானையையும் காணாதது கொஞ்சம் நெருடலே எனினும், யானைச் சாணத்தைப் பல இடங்களில் கண்டது அதனை இட்ட யானையையே கண்டது போல ஆறுதல் அளித்தது.
மைசூர் தொடரி நிலையத்திலிருந்து நீலகிரி மாவட்டத்திலுள்ள கூடலூரைத் (Gudalur) தாண்டி அத்திக்குனாவை நோக்கிச் செல்லும் பாதையில் கர்நாடகப் பந்திப்பூர் புலிகள் சரணாலயத்தின் வழி ஜீப் செல்ல வேண்டிய சூழல். கர்நாடக எல்லையில் பந்திப்பூர் முடிந்த இடத்தில் தொடங்கியது தமிழக எல்லைக்குள் இருக்கும் முதுமலை புலிகள் சரணாலயம். ஒரே நாளில் இரு சரணாலயங்கள் சென்றும் பணி நிமித்தமாக கானகக் காவலரின் கானக உலா (safari) செல்ல இயலவில்லை என்பது வருத்தமே. மேலும், இரு முறைகள் கடக்க நேர்ந்தும் இரு முறைகளுமே பட்டப்பகல் என்பதால், அவ்வளவாக விலங்குகளையோ பறவைகளையோ காண இயலாத சூழல். இவ்வகை எண்ணங்களோடு பயணித்துக் கொண்டிருக்கும் போது, சாலையருகே ஓடும் ஒரு சிற்றோடையின் ஓரத்தில் சில குடில்கள் தெரிய, அருகிலே ஒரு கருத்த பெருத்த உருவம் காற்றில் இலைகள் ஆடுவது போல மெல்ல அசைந்தவாறு நின்றிருந்தது. ஐயமின்றி யானையே என்று கண்கள் விரிய, அதன் காலில் கொலுசு போல சங்கிலி பூட்டப்பட்டிருந்தது ஒரு விசயத்தைத் தெளிவாகச் சொன்னது.
அந்த யானை மனிதருக்குக் கட்டுப்படாத காட்டு யானையும் அல்ல, மனிதருக்கு முழுமையாக கட்டுப்படும் சாவிகொடுத்த பொம்மை போல இயங்கும் கோவில் யானையும் அல்ல. இரண்டிற்கும் இடையிலிருப்பது போல, மனிதரின் ஒருசில கட்டளைகளை மதிக்கும் அதே நேரம், தன் கட்டுக் குணத்தை முழுமையாக இயக்காத ஒரு “கும்கி” யானை. வெகு நீளமான சங்கிலியால் கால்கள் பிணைக்கப்பட்டிருந்ததால், அவை அங்குமிங்கும் செல்ல வழிவகை செய்திருந்தனர். அருகிலேயே புல்லுக்கட்டும் தட்டைப்பயிர்களையும் அடுக்கி வைத்திருந்தனர். எனவே, யானை விரும்பியபடி இருந்தது. ஓட்டுநரிடம் “என்னங்கண்ணே, கும்கி தானேங்க இது” என்று வினவி என் யூகத்தினை உறுதி செய்துகொண்டேன். வைரத்தை வைரத்தால் மட்டுமே அறுக்க முடியும் என்பது போல, தரையில் மிகப்பெரிய விலங்கான யானையை அடக்க வேறெந்த விலங்கால் முடியும். அதிலும், ‘உருவம் பெருத்தவரே உயர்ந்தவர் என்று உருவ முக்கியத்துவம்’ என்ற சட்டம் இருக்கும் காட்டின் விளிம்புகளில் வாழும் மக்கள் மற்றும் சரணாலயத்தின் சுற்றிலும் உள்ள மனிதர்வாழ் பகுதிகளில் பாதுகாப்பும், இந்தக் கும்கிகளின் தும்பிக்கைகளில் உள்ளது என்பது மக்களின் நம்பிக்கை.
அந்தக் கும்கியானையின் வலப்பக்கத் தந்தம் பழுது பட்டிருக்கிறது என்பது அது ஒரு விழுப்புண் பட்ட போர்வீரன் என்று காட்டுகிறது. கொம்பு சிதைந்தாலும், தன்னம்பிக்கை சிதையாத வீரனிவன். சிறிது நேரம் வண்டியை ஓரம்கட்டி அவனது பேரெழிலை நுகர்ந்து இன்புற்றிருக்கும் வேளையில் ஒரு செயலைச் செய்தது. அதாவது ஓடையின் கரையைத் தாண்டி ஓடையில் கால்கள் நனையுமாறு நின்று கொண்டு, ஒரு கொத்துப் புல்லை எடுத்து, அதை நனைத்துத் தன் தலைக்கு மேல் துதிக்கையை உயர்த்தி தலையில் வைத்துக்கொண்டது. ஒரு சில விநாடிகளுக்குப்பின், தலையை பொறுமையாக அசைத்ததில், புல்கட்டு கீழே விழுந்துவிட்டது. ஏனிப்படிச் செய்தாய் என்று கவிதை வடிவில் நான் கேட்க, யானையாரும் கவிதை வடிவிலேயே விடையைச் சொல்ல இரு கவிதைகளையும் பகிர்கிறேன்:

புல்லினை கையால் பற்றி
… புசித்திடு வதுபோல் தூக்கிப்
பல்லிடை வைக்க வில்லை
… பஞ்சணை செய்ய வில்லை;
நல்லவர் தலையில் வைத்தீர்
… நயமுடன் அந்த உத்தி,
சொல்லிடு ஆனை அண்ணே
… தம்பியென் வினாவை ஏற்றே!

எல்லுகும் கதிரில் தேக
… வெப்பமோ கூடிப் போகும்;
மெல்லிய மேனிச் சூடும்
… மிரட்டுமோர் நோயைக் கூட்டும்;
வல்லமை குறைந்து கெட்டு
… வராதபல் நோய்கள் சேரும்;
புல்லிலை தலையில் ஈரம்
… குளிர்ச்சியைக் கூட்டு வேனே!

(அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்)
(வாய்பாடு: விளம் மா தேமா x 2)

எல்லுகும் = சூரியன் வெளியேற்றும்.
அதாவது, 'புல்லை உங்கள் தும்பிக்கை எனும் கைகளில் பற்றித் தூக்கிய போது பற்களின் இடையே வைத்து உண்பீர் என நினைத்தேன். அந்தப் புல்லுக்கட்டை பஞ்சனையாக படுக்கவும் வைத்துக்கொள்ளவில்லை. மாறாக, ஏன் நல்லவரான உங்கள் தலையில் வைத்துக்கொண்டீர் யானையண்ணே. இந்தத் தம்பிக்கு விடை தாரீர்' என்று வினவினேன். யானை அண்ணனோ, 'சூரியன் (எல்) வெளியேற்றும் கதிர்வீச்சால் உடம்பு சூடானது, தம்பி. சற்றே உடற்சூடு வந்தாலும், உடல்நலனைக் கெடுக்கும் பல நோய்கள் வரும் என்பதால், உடலுக்குக் குளிர்ச்சியைக் கொடுக்கவே ஈரப்புல்லைக் கொண்டு கிரீடம் அமைத்தோம், தம்பி' என்று பதில் உரைத்தார். வெயில் நேரங்களில் உடல் வெப்பத்தை சமன்பாடான நிலையில் வைத்துக்கொள்ள இவ்வகைக் குளிரூட்டும் செயல்களை யானைகள் செய்கின்றன. இதனால் உடற்சூடு தொடர்பான நோய்களிலிருந்து தங்களின் பேருருவத்தைத் தாங்களே தற்காத்துக் கொள்கின்றன.
இந்தக் கொம்பனைத் தாண்டி பயணித்த போது அங்கே ஒரு யானை தெரிந்தது. அதற்குக் தந்தங்கள் இல்லை. எனினும், எக்காரணம் கொண்டும் பிடி என்ற பெண் யானைகளைக் கும்கியாகப் பயன்படுத்த மாட்டார்கள் என்று பொறி தட்ட, நான் கண்டது ‘மோலை’ என்று அழைக்கப்படும் தந்தம் வளராத ஆண் யானை என்பது மனதிற்கு பூரிப்பு அளித்தது. பொதுவாக, ஆசிய யானைகளில் ஆண்களுக்கு மட்டுமே தந்தங்கள் வளரும். இது பொது விதி என்பதால், விதிவிலக்காக, வெகு சில ஆண் யானைகளுக்குத் தந்தங்கள் கிடையாது. இதை ஒரு குறைபாடாகக் காணும் பெண்யானைகள் இவற்றை அவமதித்து ஒதுக்கி விடுவதால், தந்தமுள்ள களிற்றை விடவும் இந்த மோலைக்களிறுகளிடம் கோபமும், வேகமும் மிகவும் அதிகமாகவே இருக்கும். என் கருத்தில் கும்கியாக செயல்பட முழுத்தகுதியுள்ள யானைகள், மோலை யானைகள் என்பேன். நம் வீட்டில் வளரும் காளைகளிலும் கொம்பற்ற மோலைக்காளைகளைக் கண்டிருக்கிறேன். அவை எப்போதுமே உக்கிர வடிவிலேயே ஊரில் உலவும். இதே போல ஒரு சில பிடிகள் (பெண் யானைகள்) கொம்பு வளர்க்கும். எனினும், இவற்றின் கொம்புகள் நீளமாக வளர்வதில்லை என்பது, ஒருசில மனிதப் பெண்டிரின் பூனை மீசையும் சில தாடி முடிகளும் வளர்வது போலத்தான். உடலில் மரபணுக்களின் தாண்டவத்தால் இவ்வாறான விதிவிலக்குகள் அமைகின்றன.
‘பிள்ளையாரை விரும்பியதால் யானை மீது காதல் வரவில்லை. மாறாக, யானையைக் காதலித்ததாலேயே விநாயகரைப் பிடிக்கும்’ என்று உடன் வந்த ஊழியரிடமும் ஓட்டுநரிடமும் சொல்லியபடி அத்திக்குனாவில் காத்திருக்கும் இயற்கையின் புதையல்களைத் தேடிப் பயணித்தேன். வழியில் பல இடங்களில் யானைசாணம் கண்டு இன்புற்றேன்.
தங்க வேண்டிய மேலாளரின் பங்களாவில் தங்கியிருந்த போது, மேலாளரின் உறவினர், “ஆண் யானையின் சாணத்தைக் கண்டேன், ஆனால், யானையைப் பார்க்கவில்லை” என்றதும் எனக்கு வியப்பு. எப்படி ஒரு விலங்கைப் பாராமலே அதன் பாலினம் சொல்கிறார் என்று. பின்னர் அவரே விளக்கினார், “சாணமிடும் போது எல்லா விலங்குகளும் சிறுநீரும் கழிக்க, சிறுநீரும் சாணமும் தனித்தனியே ஓரிரு அடிகள் விலகி இருப்பின் அது களிற்றின் செயல். இடைவெளி இல்லாது இருந்தால் அது பிடியின் செயல்.” உடற்கூறியல் செய்து வைத்திருக்கும் பாலியல் பாடு அவ்வளவு தானுங்களே என்றதும், ‘அடடே, இந்த சின்ன விசயத்தையா யோசிக்காது விட்டோம்’ என்று எண்ணியபடி, இந்த எளிமையான தகவலைக் கற்பித்ததற்கு அவருக்கு நேரிலும், அவருக்குக் கற்பித்த ஆதிகுடியினருக்கு மனத்தாலும், நனி நன்றிகள் பல கூறினேன்.