#வீட்டில்_ஒற்றுமை_இல்லையா? #மன_அமைதியில்லையா? ******************************…

#வீட்டில்_ஒற்றுமை_இல்லையா?
#மன_அமைதியில்லையா?
********************************
வெண்கடுகையும் சாம்பிராணியையும் சேர்த்து தூபம் போடுங்கள்.
வீட்டில் புகுந்து கொள்ளும் தீய சக்திகளை விலக்குவது கடினம் அல்ல. ஆனால் வீட்டில் அமைதி இன்மைக்குக் காரணமே தீய சக்திகள்தான் என்பது மட்டும் சத்தியமான உண்மை.

ஒற்றுமையாக இருந்து வந்த குடும்பங்கள் கூட சிறு சிறு பிரச்சனைகளினால் மன ஒற்றுமை இன்றி சிதறும் என்பதின் காரணம் அந்த தீய ஆவிகளின் செயல்பாடினால்தான் .
வெண்கடுகு எனும் வெண் கணங்களின் மத்தியில் பைரவர் இருப்பார்ஆகவே அப்படிப்பட்ட தீய சக்திகள் வீடுகளில் புகுந்து கொள்ளும்போது அவற்றின் தீமையைக் குறைக்கும் வழி முறை என்ன? அதைக் குறித்து சாயி உபாசகர் ஒருவர் கூறிய நிவாரணம் இது.

''மனதளவில் பிரிந்து உள்ள குடும்பங்கள் ஒன்று சேரவும் , குடும்பத்தில் எப்போதும் அமைதி நிலவவும், வீட்டில் உள்ள தீய சக்திகள் வெளியேறவும் ஒரு எளிய பரிகாரம் உள்ளது.

வீடுகளில் மன அமைதி இல்லாமல், குடும்ப ஒற்றுமை இல்லாமல் உள்ளவர்கள் சாம்பிராணி தூபத்தைப் போட வேண்டும். அதில் சிறிதளவு வெள்ளைக் கடுகை ( வெண்கடுகு என்பார்கள்) போட்டு விட்டு வீட்டில் அனைத்து அறைகளிலும் எடுத்துச் சென்று அந்தப் புகையைக் பரவ விட்டு வந்து ஸ்வாமி அறையில் வைத்து விட வேண்டும். அதன் பின் நடப்பதைப் பாருங்கள்.

வீட்டில் அந்நாள் வரை இருந்து வந்த மன அமைதி மெல்ல மெல்ல அதிகமாவதைக் காணலாம்.

வெண் கடுகிற்கு அத்தனை சக்தியா? அது எதனால்? அதன் காரணத்தைக் கேட்டபோது ஒரு பண்டிதர் கீழ் கண்ட காரணங்களைக் கூறினார். ''வெண் கடுகு சாமான்யமான பொருள் அல்ல. அது கடவுள் தன்மையைக் கொண்டது. அது தேவ கணம் ஆகும்.

வெள்ளைக் கடுகுச் செடிகள் குளிர்ச்சியை தருபவை. அவை இமய மலையை சுற்றிக் காவல் புரியும் பைரவரின் தேவ கணங்கள். ஆகவேதான் அவை அதிகம் இமய மலை அடிவாரங்களில் காணப்படும். பிரபஞ்சத்தின் அனைத்து தீய சக்திகளைளையும் அடக்கி ஒடுக்கி வைத்துள்ளவர் பைரவர் ஆவார்.

ஆகவே வெண் கடுகு உள்ள இடத்தில் தீய சக்திகள் இருக்க முடியாது. அவை புகையாக மாறும்போது, அதன் உள்ளே உள்ள தேவ கணங்கள் தீய ஆவிகளை அடித்துத் துரத்தும். குடும்பத்தில் குலதெய்வ பலம் கூடும் குறைகள் அணைத்தும் தீரும் இனி குடும்பத்தில் குதூகலம்தான்,,,

#பஜ்ஜி_வகைகள்_30 #மிளகாய்_பஜ்ஜி தேவையானவை: பஜ்ஜி மிளகாய் – 6, கடலை மாவு – ஒரு …

#பஜ்ஜி_வகைகள்_30

#மிளகாய்_பஜ்ஜி

தேவையானவை: பஜ்ஜி மிளகாய் – 6, கடலை மாவு – ஒரு கப், அரிசி மாவு – முக்கால் கப், மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் – சிறிதளவு, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: பஜ்ஜி மிளகாயை நீளவாக்கில் இரண்டு பாதியாக நறுக்கி, உள்ளே இருக்கும் விதைகளை நீக்கவும். கடலை மாவுடன் அரிசி மாவு, உப்பு, பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து, தண்ணீர் விட்டு கெட்டியாகக் கரைக்கவும். கரைத்த மாவில் ஒவ்வொரு மிளகாயாக தோய்த்து, காயும் எண்ணெயில் போட்டு எடுக்கவும்.

கமகம சமையல்
——————————————
காப்ஸிகம் பஜ்ஜி

தேவையானவை: பெரிய குடமிளகாய் – 1, கடலை மாவு, அரிசி மாவு – தலா ஒரு கப், மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன், சோள மாவு – அரை டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: கடலை மாவு, அரிசி மாவு, சோள மாவு, மிளகாய்த்தூள், உப்பு ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு, தண்ணீர் விட்டு கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும். குடமிளகாயை நீளவாக்கில் நறுக்கி, விதை நீக்கி, பஜ்ஜி மாவில் தோய்த்து எடுத்து, காயும் எண்ணெயில் போட்டு எடுக்கவும்.

வெங்காய சட்னி, புதினா சட்னி இதற்கு சிறந்த காம்பினேஷன்.
——————————————————————–கம கம சமையல் ——————————————
காலிஃப்ளவர் பஜ்ஜி

தேவையானவை: சிறிய காலிஃப்ளவர் – 1, அரிசி மாவு, பொட்டுக்கடலை மாவு, சோள மாவு கலவை – 3 கப், மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: காலிஃப்ளவரை காம்புடன் ஆய்ந்து துண்டுகளாக்கிக் கொள்ளவும். இதை சூடான வெந்நீரில் 2 நிமிடம் போட்டு வைத்து, நீரை வடிகட்டவும். அரிசி மாவு, பொட்டுக்கடலை மாவு, சோள மாவு கலவையுடன் உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து, தண்ணீர் விட்டு கெட்டியாகக் கரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், ஒவ்வொரு காலிஃப்ளவர் துண்டையும் மாவில் தோய்த்துப் போட்டு, வெந்ததும் எடுக்கவும்.
——————————————————————–கம கம சமையல் —————————————-
நேந்திரம்பழ பஜ்ஜி

தேவையானவை: நேந்திரம்பழம் – 2, கடலை மாவு, அரிசி மாவு – தலா ஒரு கப், மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு கெட்டியாகக் கரைக்கவும். நேந்திரம்பழத்தை தோல் உரித்து விடாமல், அப்படியே தோலுடன் வில்லைகளாக நறுக்கி, மாவில் தோய்த்து, காயும் எண்ணெயில் போட்டு எடுக்கவும்.

இனிப்பும் காரமும் இணைந்து ருசிக்கும் இந்த கேரளா ஸ்பெஷல். இதற்கு சைட் டிஷ் தேவை இல்லை.
——————————————————————–கம கம சமையல் —————————————-
வாழைக்காய் மசாலா பஜ்ஜி

தேவையானவை: வாழைக்காய் – 2, அரிசி மாவு, கடலை மாவு – தலா ஒரு கப், கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள் – தலா 2 டீஸ்பூன், இஞ்சி பேஸ்ட், பூண்டு பேஸ்ட் – தலா ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: அரிசி மாவுடன், கடலை மாவு, கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், உப்பு, இஞ்சி பேஸ்ட், பூண்டு பேஸ்ட் சேர்த்து, தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, மிதமான தீயில் எரிய விடவும். வாழைக்காயைத் தோல் சீவி நீளவாக்கில் நறுக்கி, மாவில் தோய்த்து, காயும் எண்ணெயில் போட்டு எடுக்கவும்.

வாழைக்காயை மசாலா சேர்த்துச் செய்வதால், வித்தியாசமான சுவையுடன் இருக்கும். இதற்கு சாம்பார் சூப்பர் சைட் டிஷ்.
——————————————————————–கம கம சமையல்
————————————–
பேபிகார்ன் பஜ்ஜி

தேவையானவை: பேபிகார்ன் – 6, கடலை மாவு, அரிசி மாவு – தலா 4 டேபிள்ஸ்பூன், சோள மாவு – இரண்டு டீஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: பேபிகார்னின் மேல் உள்ள தழைகளை உரித்து நீளவாக்கில் சரிபாதியாக நறுக்கவும். கடலை மாவு, அரிசி மாவு, சோள மாவு, மிளகாய்த்தூள், உப்பு எல்லாவற்றையும் சிறிது தண்ணீர் விட்டு கரைத்துக் கொள்ளவும். நறுக்கிய பேபிகார்னை மாவில் தோய்த்து, காயும் எண்ணெயில் போட்டு எடுக்கவும்.

குழந்தைகளுக்கு மிளகாய்த்தூள் போடாமல் தயாரித்துக் கொடுக்கலாம்.
——————————————————————–கம கம சமையல் ——————————————
கத்திரிக்காய் மசாலா பஜ்ஜி

தேவையானவை: கத்திரிக்காய் – 1, கடலை மாவு, அரிசி மாவு, சோள மாவு மூன்றும் சேர்த்த கலவை – ஒரு கப், மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் – கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: மூன்று மாவுக் கலவையுடன் மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து, தண்ணீர் விட்டு கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும். கத்திரிக்காயை வட்ட வட்டமாக நறுக்கி, கரைத்த மாவில் தோய்த்து, காயும் எண்ணெயில் போட்டு, வெந்ததும் எடுக்கவும்.

கத்திரிக்காய் மசாலா பஜ்ஜிக்கு வத்தக்குழம்பு சூப்பர் காம்பினேஷன்.
——————————————————————–கம கம சமையல் —————————————–
பீர்க்கங்காய் பஜ்ஜி

தேவையானவை: பீர்க்கங்காய் – 1, கடலை மாவு, அரிசி மாவு – தலா ஒரு கப், மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், சோள மாவு – 2 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, சோள மாவு, உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து, தண்ணீர் விட்டு கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும். பீர்க்கங்காயை தோல் சீவி வில்லைகளாக நறுக்கி, மாவில் தோய்த்து, காயும் எண்ணெயில் போட்டு எடுக்கவும்.

இந்த பஜ்ஜி மிகவும் வாசனையாக இருக்கும். தேங்காய் சட்னி இதற்கு அற்புதமான சைட் டிஷ்!
——————————————————————–கம கம சமையல்
—————————————
கேரட் பஜ்ஜி

தேவையானவை: பெரிய கேரட் – 2, அரிசி மாவு, பொட்டுக்கடலை மாவு – தலா ஒரு கப், நன்றாகப் பொடித்த மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன், இஞ்சி பேஸ்ட் – ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: பொட்டுக்கடலை மாவுடன் அரிசி மாவு, மிளகுத்தூள், இஞ்சி பேஸ்ட், உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு மாவை கெட்டியாகக் கரைக்கவும். கேரட்டை வில்லைகளாக நறுக்கி, மாவில் தோய்த்து, காயும் எண்ணெயில் போட்டு எடுக்கவும்.

இதற்கு சாஸ் தொட்டுச் சாப்பிட்டால்… அருமையாக இருக்கும்.
——————————————————————–கம கம சமையல் ——————————————-
மல்டி கீரை போண்டா

தேவையானவை: சர்க்கரைவள்ளிக் கிழங்கு – 1, அரிசி மாவு – ஒரு கப், சோயா மாவு – 2 டீஸ்பூன், கடலை மாவு – 2 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய வெந்தயக்கீரை, முளைக்கீரை – தலா ஒரு கப், பொடியாக நறுக்கிய புதினா, முள்ளங்கி இலை – தலா ஒரு கைப்பிடி, கறிவேப்பிலை – சிறிதளவு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், பூண்டு பேஸ்ட், மிளகுத்தூள் – தலா ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: சர்க்கரைவள்ளிக் கிழங்கை வேக வைத்து தோல் உரிக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும்… நறுக்கிய வெந்தயக்கீரை, முளைக்கீரை, புதினா, கறிவேப்பிலை, முள்ளங்கி இலை, பச்சை மிளகாய், பூண்டு பேஸ்ட், மிளகுத்தூள் எல்லாவற்றையும் சேர்த்து உப்பு போட்டு வதக்கவும். இதனுடன் வேக வைத்த சர்க்கரைவள்ளிக் கிழங்கு சேர்த்துப் பிசைந்து, ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். அரிசி மாவு, சோயா மாவு, கடலை மாவு சேர்த்து, சிறிது உப்பு போட்டு, தண்ணீர் விட்டு கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும். இதில் உருண்டைகளைத் தோய்த்து எடுத்து, காயும் எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.

சூடான கீரை போண்டாவுடன் தேங்காய் சட்னி சேர்த்துச் சாப்பிட… நொடியில் தட்டு காலிதான்.
——————————————————————–கம கம சமையல்
——————————————
ஹெர்பல் பக்கோடா

தேவையானவை: அரிசி மாவு, கடலை மாவு – தலா ஒரு கப், மிளகு, துளசி இலை – தலா 10, தோல் சீவி பொடியாக நறுக்கிய இஞ்சி – ஒரு டேபிள்ஸ்பூன், வெற்றிலை – 1, புதினா – சிறிதளவு, நறுக்கிய ஓமவல்லி இலை (அ) ஓமம், பூண்டு பேஸ்ட் – தலா ஒரு டீஸ்பூன், வெண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, கடலை மாவு, ஓமவல்லி (அ) ஓமம், பூண்டு பேஸ்ட், வெண்ணெய், உப்பு சேர்த்துக் கலக்கவும். பிறகு, மிளகை உடைத்துப் போடவும். இஞ்சி, புதினா, துளசி, வெற்றிலையை பொடியாக நறுக்கி சேர்க்கவும். இதில் தண்ணீர் விட்டு, மாவை கெட்டியாகப் பிசைந்து, பக்கோடாக்களாக காயும் எண்ணெயில் கிள்ளிப் போடவும். பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும்.

இந்த பக்கோடாவில் மூலிகை வாசம் மூக்கைத் துளைக்கும். இது உடலுக்கு மிகவும் நல்லது.
——————————————————————–கம கம சமையல் —————————————-
பனீர் பக்கோடா

தேவையானவை: பனீர் – 10 துண்டுகள் (பொடித்துக் கொள்ளவும்), நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, பொடியாக நறுக்கிய வெங்காயம் – ஒரு கப், கேரட் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், ரஸ்க் தூள் – ஒரு கப், ரவை – 2 டேபிள்ஸ்பூன், சோள மாவு – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் ரஸ்க் தூள், சோள மாவு, ரவை, நறுக்கிய வெங்காயம், கேரட் துருவல், கொத்தமல்லி, உப்பு எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து, பொடித்த பனீரைப் போட்டு, சிறிது தண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். இந்த மாவிலிருந்து சிறிது எடுத்து, பக்கோடாக்களாக காயும் எண்ணெயில் கிள்ளிப்போட்டு பொரித்தெடுக்கவும்.

தேங்காய் சட்னி இதற்கு நல்ல காம்பினேஷன்.
——————————————————————–கம கம சமையல்
——————————————-
ஸ்பிரிங் ஆனியன் பக்கோடா

தேவையானவை: அரிசி மாவு – ஒன்றரை கப், கடலை மாவு – முக்கால் கப், வெங்காயத்தாள் – ஒரு கட்டு (பொடியாக நறுக்கவும்), இஞ்சி பேஸ்ட் – ஒரு டீஸ்பூன், வெண்ணெய் – 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் – 1 (பொடியாக நறுக்கவும்), உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: அரிசி மாவுடன் கடலை மாவு, நறுக்கிய வெங்காயத்தாள், உப்பு, வெண்ணெய், இஞ்சி பேஸ்ட், பச்சை மிளகாய் சேர்த்து தண்ணீர் தெளித்துப் பிசைந்து கொள்ளவும். இந்த மாவை பக்கோடாக்களாக காயும் எண்ணெயில் கிள்ளிப் போட்டு எடுக்கவும்.

வெங்காயத்துக்குப் பதிலாக வெங்காயத்தாள் போட்டு செய்வதால், டேஸ்ட் வித்தியாசமாக இருக்கும்.
——————————————————————–கம கம சமையல் ——————————————–
கார்ன்-காப்ஸிகம் பக்கோடா

தேவையானவை: அரிசி மாவு – ஒரு கப், கடலை மாவு – அரை கப், பேபிகார்ன் – 4, பச்சை மிளகாய் – 1, இஞ்சி – ஒரு துண்டு, குடமிளகாய் – 2, கறிவேப்பிலை – சிறிதளவு, வெண்ணெய் – ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: பேபிகார்ன், குடமிளகாய், இஞ்சி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். அரிசி மாவு, கடலை மாவுடன் நறுக்கிய காய்கறிகளைப் போட்டு உப்பு, வெண்ணெய், கறிவேப்பிலை சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து பிசைந்து கொள்ளவும். இதிலிருந்து சிறிது சிறிதாக எடுத்து, பக்கோடாக்களாக காயும் எண்ணெயில் கிள்ளிப்போட்டு பொரித்தெடுக்கவும்.

சோள வாசனையுடன், குடமிளகாய் ருசியில் அற்புதமாக இருக்கும் இந்த பக்கோடா.
——————————————————————–கம கம சமையல்
———————————————
ஜவ்வரிசி பக்கோடா

தேவையானவை: ஜவ்வரிசி – 200 கிராம், அரிசி மாவு – ஒரு கப், பெரிய வெங்காயம் – 2, இஞ்சி – ஒரு சிறிய துண்டு, பச்சை மிளகாய் – 2, கொத்தமல்லி – சிறிதளவு, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கவும். ஜவ்வரிசியை தண்ணீர் தெளித்துப் பிசிறி வைக்கவும். நன்றாக ஊறி, மிருதுவாகும் வரை தண்ணீர் தெளித்து தெளித்து கிளறி வைக்கவும். இதனுடன் அரிசி மாவு, உப்பு, நறுக்கிய காய்கறிகளைப் போட்டு நன்றாகப் பிசையவும். இந்த மாவை பக்கோடாக்களாக காயும் எண்ணெயில் கிள்ளிப் போட்டு பொரித்தெடுக்கவும்.

இதை புதினா போட்டு செய்யலாம். பூண்டு விழுது சேர்த்தும் செய்யலாம். முத்து முத்தாக பார்க்கவே அழகாக இருக்கும் இந்த பக்கோடா.
——————————————————————–கம கம சமையல் —————————————-
வேர்க்கடலை-முந்திரி பக்கோடா

தேவையானவை: அரிசி மாவு – ஒரு கப், கடலை மாவு – அரை கப், வறுத்து, தோல் நீக்கிய வேர்க்கடலை – ஒரு கப், வறுத்த முந்திரிப்பருப்பு – 20, பொட்டுக்கடலை – ஒரு டேபிள்ஸ்பூன், வெண்ணெய் – 2 டீஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: அரிசி மாவு, கடலை மாவுடன், வறுத்த வேர்க்கடலை, முந்திரி, பொட்டுக்கடலை, வெண்ணெய், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். இதிலிருந்து சிறிது சிறிதாக எடுத்து, பக்கோடாக்களாக காயும் எண்ணெயில் கிள்ளிப்போட்டு, பொன்னிறமாக வேக விட்டு எடுக்கவும்.

கடலைப்பருப்பு, பொட்டுக்கடலை, வேர்க்கடலை மூன்றையும் ஊற வைத்து, அரைத்துச் செய்தால் இன்னும் ருசியாக இருக்கும்.
——————————————————————–கம கம சமையல் ——————————————
கீரை பக்கோடா

தேவையானவை: அரிசி மாவு, கடலை மாவு இரண்டும் சேர்த்து – ஒன்றரை கப், மிளகாய்த்தூள் – கால் டீஸ்பூன், பூண்டு பேஸ்ட், பொடியாக நறுக்கிய இஞ்சி – தலா ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய முளைக்கீரை, புதினா – தலா ஒரு கைப்பிடி, வெண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: அரிசி மாவு, கடலை மாவு, மிளகாய்த்தூளுடன், இஞ்சி, புதினா, பூண்டு பேஸ்ட், கீரை, வெண்ணெய், உப்பு சேர்த்துக் கலந்து, சிறிது தண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். இந்த மாவை பக்கோடாக்களாக காயும் எண்ணெயில் கிள்ளிப்போட்டு, இருபுறமும் கிளறி விட்டு, வெந்ததும் எடுக்கவும்.

முளைக்கீரைக்கு பதிலாக, முருங்கைக் கீரையிலும் பக்கோடா செய்யலாம்.
——————————————————————–கம கம சமையல் ——————————————–
நட்ஸ் பக்கோடா

தேவையானவை: அரிசி மாவு, கடலை மாவு – ஒரு கப், வெண்ணெய் – 2 டீஸ்பூன், வறுத்து, தோல் நீக்கிய வேர்க்கடலை – ஒரு கப், வறுத்த முந்திரிப்பருப்பு, பிஸ்தா – தலா 10, மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், நறுக்கிய புதினா, கொத்தமல்லி – சிறிதளவு, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: அரிசி மாவுடன் கடலை மாவு, வெண்ணெய், மிளகாய்த்தூள், உப்பு, பிஸ்தா, வேர்க்கடலை, முந்திரிப்பருப்பு, புதினா, கொத்தமல்லி எல்லாவற்றையும் சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசையவும். இதிலிருந்து சிறிது எடுத்து, பக்கோடாக்களாக காயும் எண்ணெயில் கிள்ளிப்போட்டு, பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும்.

கொத்தமல்லி சட்னியுடன் சாப்பிட… அட்டகாசமாக இருக்கும்.
——————————————————————–கம கம சமையல் ——————————————-
மஷ்ரூம் பக்கோடா

தேவையானவை: அரிசி மாவு – ஒன்றரை கப், கடலை மாவு – ஒரு கப், நறுக்கிய மஷ்ரூம், பொடியாக நறுக்கிய வெங்காயம் – தலா ஒரு கப், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி – தலா ஒரு டீஸ்பூன், வெண்ணெய் – ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: அரிசி மாவுடன் கடலை மாவு, மஷ்ரூம், வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து, வெண்ணெய் போட்டு, சிறிது தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். இதை பக்கோடாக்களாக காயும் எண்ணெயில் கிள்ளிப்போட்டு, பொன்னிறமாக வேக விட்டு எடுக்கவும்.

இந்த பக்கோடாவுக்கு வெங்காய சட்னி நன்றாக இருக்கும்.
——————————————————————–கம கம சமையல் ———————————————-
சேமியா பக்கோடா

தேவையானவை: வறுத்த சேமியா – ஒன்றரை கப், பொடியாக நறுக்கிய வெங்காயம் – அரை கப், நறுக்கிய பச்சை மிளகாய் – 1, நறுக்கிய கொத்தமல்லி – ஒரு கப், இஞ்சி – ஒரு துண்டு (பொடியாக நறுக்கவும்), வெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: சேமியாவில் இளம் சூடான தண்ணீரைத் தெளித்துக் கிளறி ஊற விடவும். ஊறியதும் வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லியைப் போட்டு… வெண்ணெய், உப்பு சேர்த்துக் கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். இதிலிருந்து சிறிது சிறிதாக எடுத்து, பக்கோடாக்களாக காயும் எண்ணெயில் கிள்ளிப்போட்டு, வெந்ததும் எடுக்கவும்.

இதற்கு தேங்காய் சட்னி தொட்டு சாப்பிடலாம்.
——————————————————————–கம கம சமையல் —————————————-
மசாலா போண்டா

தேவையானவை: அரிசி மாவு – 4 டேபிள்ஸ்பூன், கடலை மாவு – ஒரு கப், இஞ்சி – ஒரு சிறிய துண்டு, பச்சை மிளகாய் – 1, புதினா – சிறிதளவு, மிளகாய்த்தூள், பூண்டு பேஸ்ட், கரம் மசாலாத்தூள் – தலா ஒரு டீஸ்பூன், உருளைக்கிழங்கு – 2, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: அரிசி மாவு, கடலை மாவு இரண்டையும் தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். இஞ்சி, பச்சை மிளகாய், புதினாவை பொடியாக நறுக்கவும். உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து, இதனுடன் நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், புதினா, பூண்டு பேஸ்ட், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து நன்றாகப் பிசைந்து, சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். இந்த உருண்டைகளை கரைத்து வைத்துள்ள மாவில் தோய்த்து எடுத்து, காயும் எண்ணெயில் போட்டு பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும்.

இதன் சுவையும், மணமும் அபாரம்!
——————————————————————–கம கம சமையல் —————————————–
பிரெட் பஜ்ஜி

தேவையானவை: பிரெட் – 10 துண்டுகள், கடலை மாவு – ஒரு கப், அரிசி மாவு – அரை கப், இஞ்சி பேஸ்ட் – ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: கடலை மாவு, அரிசி மாவு, இஞ்சி பேஸ்ட், உப்பு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து, தண்ணீர் விட்டு கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும். பிரெட்டை நான்கு சிறிய துண்டுகளாக்கி மாவில் தோய்த்து, காயும் எண்ணெயில் போட்டு எடுக்கவும்.

சில்லி சாஸ், தக்காளி சாஸ் ஆகியவை இதற்கு ஏற்ற சைட் டிஷ்.
——————————————————————–கம கம சமையல் —————————————–
வெஜிடபிள் போண்டா

தேவையானவை: பொடியாக நறுக்கிய கோஸ், அரிசி மாவு, பொட்டுக்கடலை மாவு – தலா ஒரு கப், உருளைக்கிழங்கு – 1, கேரட் துருவல், பொடியாக நறுக்கிய வெங்காயம், பீன்ஸ், கத்திரிக்காய் – தலா ஒரு கப், கொத்தமல்லி – சிறிதளவு, மிளகுத்தூள், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி – தலா ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும்… கேரட் துருவல், நறுக்கிய வெங்காயம், கத்தரிக்காய், கோஸ், பீன்ஸ், பச்சை மிளகாய், இஞ்சி எல்லாவற்றையும் போட்டு, உப்பு, மிளகுத்தூள் சேர்த்து வதக்கி, வேக வைத்த உருளைக்கிழங்கு, கொத்தமல்லி சேர்த்துப் பிசைந்து, நெல்லிக்காய் அளவு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். அரிசி மாவு, பொட்டுக்கடலை மாவு இரண்டையும் தண்ணீர் விட்டு சிறிது உப்பு சேர்த்து கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும். இதில் உருண்டைகளைத் தோய்த்து எடுத்து, காயும் எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.

இதற்கு சில்லி சாஸ் சிறந்த காம்பினேஷன்.
——————————————————————–கம கம சமையல்
————————————–
காலிஃப்ளவர் போண்டா

தேவையானவை: பொடியாக நறுக்கிய காலிஃப்ளவர், வெங்காயம், கடலை மாவு – தலா ஒரு கப், சோள மாவு, அரிசி மாவு – தலா 2 டீஸ்பூன், மிளகாய் பேஸ்ட், இஞ்சி பேஸ்ட் – தலா ஒரு டீஸ்பூன், வாழைக்காய் – 1, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: கடாயில் சிறிது எண்ணெய் விட்டு காலிஃப்ளவர், வெங்காயம், இஞ்சி பேஸ்ட், மிளகாய் பேஸ்ட், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். வாழைக்காயை வேக வைத்து, தோல் உரித்து, பொடியாக நறுக்கி… வதக்கிய காலிஃப்ளவர், வெங்காயத்துடன் சேர்த்துப் பிசைந்து உருண்டைகளாக உருட்டவும். அரிசி மாவு, கடலை மாவு, சோள மாவு மூன்றையும் தண்ணீர் சேர்த்து கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும். உருண்டைகளை கரைத்த மாவில் தோய்த்து காயும் எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

காலிஃப்ளவர், வாழைக்காய் காம்பினேஷன் அபாரமாக ருசிக்கும். தக்காளி சாஸ் இதற்கு நல்ல சைட் டிஷ்!
——————————————————————–கம கம சமையல் —————————————–
ரஸ்க் மிக்ஸ் போண்டா

தேவையானவை: முளைகட்டிய கொள்ளு, முளைகட்டிய பச்சை பயறு சேர்த்து – ஒரு கப், பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் – தலா ஒரு டீஸ்பூன், ரஸ்க் தூள் – ஒரு கப், சோயா மாவு, பொட்டுக்கடலை மாவு, அரிசி மாவு, கடலை மாவு – தலா ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: முளைகட்டிய கொள்ளு, முளைகட்டிய பச்சை பயறு, இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றை மிக்ஸியில் கெட்டியாக அரைக்கவும். தண்ணீர் விட வேண்டாம். இதில் ரஸ்க் தூள், உப்பு போட்டு பிசைந்து, உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். சோயா மாவு, பொட்டுக்கடலை மாவு, அரிசி மாவு, கடலை மாவு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும். உருண்டைகளை கரைத்த மாவில் தோய்த்து எடுத்து காயும் எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

இதற்கு வெங்காய சாம்பார் இருந்தால் வெளுத்துக் கட்டலாம்.
——————————————————————–கம கம சமையல் —————————————–
வாழைப்பூ போண்டா

தேவையானவை: ரவை, மைதா, அரிசி மாவு – தலா ஒரு கப், கடலை மாவு – 2 டேபிள்ஸ்பூன், ஆய்ந்து, பொடியாக நறுக்கிய வாழைப்பூ – 2 கைப்பிடி, பொடியாக நறுக்கிய வெங்காயம் – ஒரு கப், வேக வைத்து, தோல் உரித்த உருளைக்கிழங்கு – 2, பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் – தலா ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: வாழைப்பூவை நன்றாக வேக விட்டு, தண்ணீர் வடித்து பிழிந்து கொள்ளவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு… வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாயை வதக்கவும். இதனுடன் உருளைக்கிழங்கு, வாழைப்பூ, உப்பு சேர்த்துப் பிசைந்து, உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். மைதா, ரவை, அரிசி மாவு, கடலை மாவு நான்கையும் கலந்து சிறிது தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். உருண்டைகளை கரைத்த மாவில் தோய்த்து, காயும் எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

இதற்கு தேங்காய் சட்னி சூப்பர் காம்பினேஷன்.
——————————————————————–கம கம சமையல் ——————————————–
மல்டி மிளகாய் போண்டா

தேவையானவை: வேக வைத்து, தோல் உரித்த உருளைக்கிழங்கு – 2, கடலை மாவு – ஒரு கப், சோள மாவு – ஒரு டீஸ்பூன், அரிசி மாவு – 2 டீஸ்பூன், குடமிளகாய், பஜ்ஜி மிளகாய், பச்சை மிளகாய், இஞ்சித் துண்டு – தலா 1 (பொடியாக நறுக்கிக் கொள்ளவும்), பூண்டு பேஸ்ட் – ஒரு டீஸ்பூன், நறுக்கிய கறிவேப்பிலை – சிறிதளவு, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: கடாயில் சிறிது எண்ணெய் விட்டு குடமிளகாய், பஜ்ஜி மிளகாய், பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும். இதனுடன் பூண்டு பேஸ்ட், உப்பு சேர்த்துக் கிளறி… உருளைக்கிழங்கு, கறிவேப்பிலை போட்டு பிசைந்து, சிறிய உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். சோள மாவு, அரிசி மாவு, கடலை மாவு இவற்றை ஒன்றாகக் கலந்து சிறிது தண்ணீர் விட்டு கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும். உருண்டைகளை மாவுக் கரைசலில் தோய்த்து, காயும் எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.
——————————————————————–கம கம சமையல் ——————————————
மிக்ஸ்டு பருப்பு போண்டா

தேவையானவை: முளைகட்டிய பயறு, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்து – ஒரு கப், காய்ந்த மிளகாய் – 6, இஞ்சி – ஒரு துண்டு, மிளகு – 10, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை – சிறிதளவு, மைதா மாவு, அரிசி மாவு, சோள மாவு மூன்றும் சேர்த்து – ஒரு கப், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: துவரம்பருப்பு, கடலைப்பருப்பை ஊற வைத்து முளைக்கட்டிய பயறு, இஞ்சி, மிளகு, காய்ந்த மிளகாய் சேர்த்து தண்ணீர் விடாமல் கெட்டியாக அரைக்கவும். இதில் உப்பு, கறிவேப்பிலை போட்டு பிசைந்து உருண்டைகளாக உருட்டவும். மைதா மாவு, அரிசி மாவு, சோள மாவு மூன்றையும் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். உருண்டைகளை மாவுக் கரைசலில் தோய்த்து, காயும் எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

கொத்தமல்லி சட்னி இந்த போண்டாவுக்கு ஜோரான காம்பினேஷன்.
——————————————————————–கம கம சமையல் ——————————————-
பிரெட் போண்டா

தேவையானவை: சால்ட் பிரெட் – 10 துண்டுகள், உருளைக்கிழங்கு – 3, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லி – சிறிதளவு, இஞ்சி பேஸ்ட் – ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரிக்கவும். இதனுடன் பச்சை மிளகாய், உப்பு, கொத்தமல்லி, இஞ்சி பேஸ்ட் போட்டு பிசைந்து, உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். பிரெட்டின் ஓரத்தை 'கட்' செய்து லேசாக தண்ணீர் தெளித்து இரண்டாக வெட்டிக் கொள்ளவும். இந்த பிரெட் துண்டில் உருண்டையை வைத்து மூடி, காயும் எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

உருளைக்கிழங்குக்கு பதிலாக கேரட், வெங்காயம், குடமிளகாய் சேர்த்தும் தயாரிக்கலாம். சாஸ் தொட்டு சாப்பிட… சூப்பர்!
——————————————————————–கம கம சமையல் —————————————–
சர்க்கரைவள்ளிக் கிழங்கு போண்டா

தேவையானவை: சர்க்கரைவள்ளிக் கிழங்கு – 2, பொட்டுக்கடலை மாவு, அரிசி மாவு இரண்டும் சேர்த்து – ஒரு கப், பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லி, புதினா – தலா ஒரு ஸ்பூன், மிளகுத்தூள் – கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: சர்க்கரைவள்ளிக் கிழங்கை வேக வைத்து, தோல் உரித்துக் கொள்ளவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு… பச்சை மிளகாய், இஞ்சி, புதினா, கொத்தமல்லியை லேசாக வதக்கவும். இதனுடன் உப்பு, மிளகுத்தூள், வேக வைத்த சர்க்கரைவள்ளிக் கிழங்கு சேர்த்துப் பிசைந்து, உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். பொட்டுக்கடலை மாவு, அரிசி மாவு இரண்டையும் தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். உருண்டைகளை கரைத்த மாவில் தோய்த்து, காயும் எண்ணெயில் போட்டு எடுக்கவும்.

இனிப்பும், காரமும் சேர்ந்து புது சுவையுடன் அட்டகாசமாக இருக்கும் இந்த போண்டா

கம கம சமையல்